கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார்
கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நமது கையே நமக்கு உதவி என்பது போன்று நாமே நமக்கு தேவைப்படும் முகக் கவசங்களை எளிதில் தயார் செய்து கொள்ள முடியும். அதற்கான பயிற்சியை சிறைக்கைதிகளுக்கு கொடுத்து வருகிறேன்” என்றார். இவர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் சத்யராஜின் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவுக்கு வரும் முன்பு இவர் டெய்லராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது