பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி பிரதமா் மோடி தேசிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டாா்.
இதன்படி 21 நாள்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 151 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருகிற மே 1ம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஒடிஸாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ஒடிஸா, பஞ்சாப்பில் முன்னதாகவே அறிவிப்பு வெளியாகியுள்ளது.