சென்னையில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவரது வீடு இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் சிகிச்சை அளிக்கும் போது யார் மூலமாவது பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சென்னையில் இன்று இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.