Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார்.

அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த அமைப்பு நடத்திய ஆய்வின் படி ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ளார்.

முன்னதாக, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு மாநில தலைவர்களும் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். அதேபோல, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார். தற்போது, ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |