சீனாவில் பணிபுரியும் வைரஸ் நிபுணர் மாமிச சந்தையை மூடாவிட்டால் மீண்டும் வைரஸ் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்
சீனாவில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாமிசம் மற்றும் விலங்குகள் சந்தை மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் தற்போது உலகம் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதற்கு அந்த சந்தை தான் காரணம் என பலரும் நம்பி வருகின்றனர். சீனாவில் செயல்படும் மாமிச சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியது என செய்திகள் வந்ததைத் தொடர்ந்து சந்தையை உடனடியாக மூட வேண்டும் என்று அமெரிக்க எம்பிக்கள் சீனாவை வலியுறுத்தினர்.
மனிதர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில் சந்தை செயல்படுவதால் உடனடியாக மூட வேண்டும் என சீன தூதரிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர் அமெரிக்க எம்பிக்கள். அதோடு கடிதத்தில் இன்னும் எத்தனை உயிர்களை தான் நாம் பலி கொடுக்க இருக்கிறோம் முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது என அறிவுறுத்தியும் இருந்தனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான கரண்ட் ஒபினியன் எனும் நாளிதழில் வருங்காலத்தில் நோய்க்கிருமி உருவாகுமானால் அதற்கு மையமாக இருக்க போவது சீனாவில் செயல்பட்டு வரும் மாமிச சந்தைதான் என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் 10 வருடங்களாக பணியாற்றி வரும் வைரஸ் நிபுணர் பீட்டர் டசாக் அறிவுறுத்தி இருப்பதாவது “இன்னும் கூட அந்த சந்தையில் வைரஸ் இருக்கலாம், நாம் அதிலிருந்து மீண்டு வந்திருந்தாலும் அந்த வைரஸ் மறுபடியும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளதா என்பதை நாம் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்