இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றால் இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பர் என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார்
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “கொரோனா பரவுவதை தடுக்க கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும், ஊரடங்கும் அவசியமாகும். இந்தியாவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பர். கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் போதுமானது அன்று.
இந்தியாவில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 16564 பேர் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அத்துடன் பிரத்தியோகமாக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டு தரப்படுத்தப்பட்ட வழிமுறையை பின்பற்றி உள்ளோம். இந்தியா முழுவதும் ஒரு லட்சம் தனிமை படுக்கைகள் 11500 அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 7447 நெருங்கியுள்ளது. இதில் குணமாகி வீடு திரும்பியவர்கள் 642 பேர், உயிரிழந்தவர்கள் 239 பேர். நேற்று மட்டும் 1035 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 40-பேர் உயிரிழந்துள்ளனர்” எனக் கூறினார்