கிராமத்து ஸ்டைல பருப்பு உருண்டை குழம்பு, உருண்டை ஒன்று கூட உடையாமல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பருப்பு உருண்டை செய்வதற்கு தேவையானவை:
வத்தல் – 4
சோம்பு – அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு – அரை கப்
கறிவேப்பிலை – 5 இலை
கல்லுப்பு – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1
குழம்பு மசாலா கரைசளுக்கு தேவையானவை:
புளி – எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் விழுதிற்கு எடுத்துக்கொள்ள தேவையானவை:
தேங்காய்த்துருவல் – அரை கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
குழம்பிற்கு வதக்க தேவையானவை:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காய வடகம் – ஒரு ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 12 பல்
தக்காளி (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு வரமிளகாய் போட்டு, அதோடு சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து பரபரவென்று அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதோடு துவரம்பருப்பு அரை கப் எடுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இருக்கவேண்டும். ஊறவைத்து வைத்திருந்த துவரம் பருப்பையும் இதோடு சேர்த்து கல் உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளாமல் பரபரவென்று அரைத்து கொள்ளுங்கள்.
இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் புளியை நன்றாக கரைத்து அதோட கரைசலையும் ஊற்றிக் கொள்ளுங்கள். இதோடு மேலும் அரைகப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் மஞ்சள் பொடி, வத்தல் பொடி, மல்லிப்பொடி இப்பொழுது இவை அனைத்தையும் புளித் தண்ணீரில் நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, சின்ன வெங்காயம், சீரகம் சிறிது தண்ணீர் விட்டு நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி,
சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து பொரியவிடவும். ஒரு கப் அளவிற்கு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து வதக்கவேண்டும். நன்றாக வதங்கி வரும்போது, பொடியாக நறுக்கிய தக்காளி ஒரு கப் அளவிற்கு இதில் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி வர அளவிற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் மசாலா கரைசலை ஊற்றி கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் குழம்பை கொதிக்க விடுங்கள். கொதிக்கும் பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை ஒன்று ஒன்று ஒன்றாக எடுத்து குழம்பில் போடுங்கள். வெந்ததும் உருண்டை மேலெழுந்து வரும். பருப்பு உருண்டை நன்றாக வெந்து வரும் பொழுது, நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் வரை கொதிக்கவிடுங்கள். இப்பொழுது கிராமத்து மனம் மாறாத பருப்பு உருண்டை குழம்பு ரெடி..!