தமிழ்நாடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக இருப்பதை பாராட்ட மனமில்லாமல் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “கொரோனா உலக நாடுகளை கட்டிப்போட்ட நிலையில் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதியே மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகளவு கூடும் இடங்களை மூடுவதற்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் 12 குழுக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது” என தெரிவித்துள்ளனர்
மேலும், கொரோனா தொற்று காரணமாக மக்கள் துயரப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சர் கூறிய கருத்தை திமுக தலைவர் கொச்சைப்படுத்தி வருகிறார். தடுப்பு நடவடிக்கையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. ஆனால் அதனைப் பாராட்ட மனம் இல்லாததால் பலவகைகளில் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின். ஏதேனும் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்” என விமர்சித்தார்.