மும்பை தாராவியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை தாராவியில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனவால் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என்றால் அது மகாராஷ்ட்டிரா தான். இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது.
அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இந்த நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக அறியப்பட்டிருக்கும் தாராவியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதியில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தாராவி பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு வசிப்பவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வசிக்கும் இந்த பகுதியில் எண்ணற்ற தமிழர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.