கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் ஆந்திர மாநிலத்தில் 12, கர்நாடகாவில் 15 மற்றும் மத்தியபிரதேசம் இந்தூரில் 22 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி ஆகியுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தூரில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 328 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதச மாநிலத்தில், இதுவரை 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டூரில் 8, சித்தூரில் 2 மற்றும் கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரியில் தலா 1 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 13 பேர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, ஒருவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் ஒருவருக்கு கடுமையான சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை, 6 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் குணமடைந்துள்ளனர்.