நெல்லையில் இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நெல்லை மாநகரத்தில் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்கும் விதமாக அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி,
பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, இளம் பச்சை நிறத்திலான அட்டை வாங்கியோர் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் எனவும், நீல நிறத்திலான அட்டை வாங்கியோர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை அன்று மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறும்,
பின்க் நிறத்திலான அட்டை வைத்திருப்போர் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற 16-ஆம் தேதி முதல் கடுமையாக அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வியாபாரிகளும் பொதுமக்களின் அட்டையை சரிபார்த்து அவர்களுக்கு ஏற்ற நாட்களில் மட்டும் பொருள்களை விநியோகம் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.