கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து பிளாஸ்டிக் பை தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
அதன் காரணமாக பலியானவர்களின் உடலை மூடி எடுத்துச் செல்ல இரண்டு பிளாஸ்டிக் படுக்கை விரிப்புகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்டது. தற்போது அதையும் குறைத்து ஒன்றாக கொடுத்து வருகின்றனர் இதனால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்ததோடு சடலங்களை எடுத்து செல்வதால் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்திலேயே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், கொரோனாவால் பலியான ஒருவரின் உடலை காண்பித்து இறந்தவர்கள் எங்களிடம் இப்படித்தான் வந்து சேருகிறார்கள், இது வேடிக்கை ஒன்றுமில்லை லண்டனில் பல மருத்துவமனைகளில் இதுதான் தற்போதைய நிலைமை. எங்கும் பிணப் பைகள் கிடைக்கவில்லை என அவர் வேதனையோடு புலம்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதுதொடர்பாக லண்டனில் அடக்கஸ்தலங்களை நிர்வகித்து வரும் உயிரிழந்தோர்கான மேலாண்மை ஆலோசனை குழு, “பிணங்களை அகற்ற சாதாரண படுக்கை விரிப்பை கொடுப்பது பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் அதிகமாக கொரோனா பரவுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும். எனவே உடனடியாக இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுங்கள்” என்று அந்நாட்டின் சுகாதாரத் துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.