சாலையில் வீசப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொரோனா பரப்புவதற்காக இருக்கலாம் என காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சகேத் நகரில் நேற்று காலை ரூபாய் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சாலையில் கிடைத்துள்ளன. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருக்கும் பேப்பர் காலனி பகுதியிலும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடைக்கப்பெற்றது. இது குறித்தும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சாலைகளில் கிடைக்கப்பெற்ற நோட்டுகளை கைப்பற்றி காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை சோதித்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகள் சாலையில் கிடந்தால் எடுத்துக்கொள்ளும் எண்ணம் கொண்ட சில மக்கள் கூட இம்முறை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதற்கான காரணம் அங்கு சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ தான்.
அந்த வீடியோவில் ரூபாய் நோட்டுகள் மூலம் வைரஸ் பரப்ப திட்டம் தீட்டி சாலையில் வீசி வருகின்றனர் என கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே பயம் கலந்த பீதியுடன் சாலையில் கிடந்த நோட்டுகள் குறித்த தகவல் காவல்துறையினருக்கு அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வீடியோவில் குறிப்பிட்டவாறு எந்த சதியும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்கள்.