தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இதில் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை. பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.