வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்தது. அதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 5 நீதிபதிகளும் அவசர வழக்குகளை காணொலி காட்சி மூலமாக விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அவசர வழக்குகளை வீடியோ கான்பரென்ஸ் மூலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து அதற்கென உள்ள செயலி மூலமாக இந்த விலகி விசாரிப்பர் என உயர்நீதிமன்ற பதிவாளர் தகவல் அளித்துள்ளார். மேலும், அவசர வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் இணையம் மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.