செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு பல நாடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஊரடங்கு நீடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மிகவும் எளிதாக இந்த கொரோனா தொற்று பரவுவதால் அனைத்து நாடுகளும் இதனை தடுப்பதற்கான தடுப்பூசியை எதிர்பார்த்துக் உள்ளனர். சில நாடுகளில் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொற்றுக்கான தடுப்பு ஊசி செப்டம்பர் மாதம் தயாராகிவிடும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். அவர் கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழுவில் இருக்கும் சாரா கில்பர்ட் என்பவர் ஆவார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “எங்களின் குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும், அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என நம்புகிறேன் அதோடு அடுத்த இரண்டு வாரங்கள் இந்த ஊசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம்” எனக் கூறினார்.