கரூர் மருத்துவக்கல்லுரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கூட கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததன் விளைவாக வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து 12 ஆக உயர்ந்துள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.