கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இதனை மேலும் நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தமிழகம், ஒடிஷா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஏப்., 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது என அவர் கூறியுள்ளார். உரிய நேரத்தில், உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.