கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் கொரோனா என்ற பெயர் பதிந்திருக்கும். அந்த அளவிற்கு அதன் தாக்கம் தற்போது இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிலர் கொரோனா என்று பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஸ்ரீராம் சர்மா கூறுகையில், “நாட்டை உலுக்கும் கொரோனா அச்சத்தை மக்கள் மத்தியில் இருந்து அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்றார். இதற்கு முன்னதாக, ஆந்திர மாநிலத்தில் கொரோனா குமார், கரோனா குமாரி என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.