மஹாராஷ்டிராவில் மேலும் 121 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக இதுவரை 2,455 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை இன்று நீட்டித்தார். இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10,541-ஐ எட்டியுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 25 நிமிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய மோடி, கொரோனா பாதிப்பில் இந்தியா 2ம் கட்டத்தில் இருப்பதால் ஊரடங்கை நீட்டிப்பது மிகவும் அவசியம் என அவர் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வைரஸ் தொற்று தொடர்ந்து பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதனை நாளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து தளர்த்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு கடுமையான ஊரடங்கை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் புதிதாக 121 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மும்பையில் மட்டும் தற்போது வரை 59 பேருக்கு கொரோனா புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.