ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் நாட்டு படகில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் உள்ளிட்டவற்றை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம், கடற்கரை பகுதிகளில் மீன்களை ஏற்றும்போதும் இறங்கும் போதும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 58 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கத்தில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேபோல, பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வு குறித்து நாளை தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஊரடங்கு தளர்வு ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேசமயம், நாடு முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு மிக கடுமையான ஊரடங்கை பின்பற்ற வேண்டும் அனா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழக மீனவர்கள் நாட்டுபடகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க செல்லலாம் என அனுமதி வழங்கியுள்ளது.