Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறியும் PCR கருவிகளை தந்த டாடா நிறுவனம்: நன்றி தெரிவித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதுவரை தமிழகத்தில் 15,502 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.

பாதிப்பு அதிகரித்து வரும் அதே நிலையில், மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடும் அதிகரித்து தான் வருகிறது. இதை நிலையில், கொரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தியை தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய சலுகைகளை முதலமைச்சர் வழங்கியிருந்தார்.

உள் நுழைவு செயற்கை சுவாசக்கருவிகள் (வெண்டிலேட்டர்), என்95 முகக் கவசங்கள், கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ICMR அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட RT – PCR வகை கொரோனா பரிசோதனை உபகரணங்கள், தனி நபர் பாதுகாப்பு கவச உடை, பல்வகை பண்பளவு கணிணித் திரைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க உதவும் PCR கிட் கருவிகளை தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. PCR கருவிகளை வழங்கிய டாடா நிறுவனத்திற்கு முதல்வர் தனது நன்றியை தெரிவித்தார்.

Categories

Tech |