தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டது. தொடக்கம் முதலே, அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய சில கடைகளுக்கு அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பால், காய்கறி, இறைச்சி போன்ற அத்தியாவசிய பொருட்களை சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் உள்ள கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை எனவும், கடை வியாபாரிகளும் முறையாக அறிவுறுத்துவது இல்லை எனவும் குற்றசாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதனை கண்காணிக்க சென்னை முழுவதும் உள்ள மண்டலங்களுக்கு 2 பறக்கும் படை வீதம், 30 பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் ஒரு புதிய உத்தரவை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த சுற்றறிக்கையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் நாளுக்கு இரு முறை இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள் மீது உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.