குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே எம்எல்ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு கவுன்சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வர் உடனான ஆலோசனை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் நேற்று கலந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உட்பட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வர் தலைமையில் நடந்த சந்திப்பின் போது தனி மனித விலகல் கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ-வை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
குஜராத்தில் மொத்தம் 650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 59 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 563 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 29 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு கவுன்சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்ற பகுதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.