ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று காலை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 3 வரை அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளனர். விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
மேலும் பல்வேறு திட்டங்களை வகுத்து வெளியிட்டது. இந்த நிலையில் ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வளையங்களில் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க கூடாது என்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களில் தளர்வுகளையோ, மாற்றங்களையோ மாநில அரசுகள் மேற்கொள்ள கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார்.