ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றதால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய விதமாக, நேற்று 31 பேருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்..
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,204 ஆக உயர்ந்தது. இதில் 81 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்தனர். தற்போது ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மீண்டும் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த ஊரடங்கால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.. அதேபோல தினமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஒரு உயிரும் போய் விடக்கூடாது என்று இரவு பகல் பாராமல் கடுமையாக தங்கள் பணியை செய்து வருகின்றனர்..
இந்த நிலையில் ஈரோட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 58 பேரில் கொத்தாக 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மீதமுள்ள 45 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.. இன்று ஒரே நாளில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி ஈரோடு மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதேபோல நடந்தால் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் யாரும் இருக்கமாட்டார்கள்..