Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும்: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, பாதிப்பு குறைவாக உள்ள பகுதி, பாதிப்பு இல்லாத பகுதி என 3 பகுதிகளாக பிரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,076 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 10,197 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 392ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று காலை மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்கள், மாவட்ட ஆட்சியகர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையில், மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக லாவ் அகர்வால் கூறினார். காலை நடந்த ஆலோசனையின் அடிப்படையில் கொரோனா பாதித்த மாவட்டங்களை 3 பகுதிகளாக பிரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Categories

Tech |