முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் தகவல் கூறினார்.
மேலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 21,994 மாதிரிகள் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், 17,835 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 2,739 பேருக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்..
தொடர்ந்து அவர் பேசுகையில், முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தின் தான் அதிகமான சோதனை ஆய்வகங்கள் உள்ளன. மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 30% மானியத்தை கூட தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சார்ந்த நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முன்வர வேண்டும் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பும் இல்லை.
தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவிலே பொது சுகாதாரம் வலுவான மாநிலம் தமிழகம் தான். பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று இல்லாத நிலையில், உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் நிர்வாகங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடர்ந்து பேசி என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, சமூகப் பரவலாக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. களத்தில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. செவிலியர்களாகவே முன் வந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணியாற்றுகிறார்கள். செவிலியர்களை அரசு சார்பில் பாராட்டியே ஆக வேண்டும். முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு எப்போதும் வராது; உரிய முறையில் நிதி விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்..