தமிழகத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வீடு மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அதில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கலாம் என்றும், நிவாரண உதவிகள் வழங்கும் முன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், நிவாரணம் வழங்க தன்னார்வலர்கள் மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.