ஈரோட்டில் சுரைக்காய் நல்ல விளைச்சல் கொடுத்தும் பயனில்லாமல் போவதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் சொட்டுநீர் பாசன முறையில் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுரைக்காய்நல்ல விளைச்சலை கொடுத்திருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்ய வழியில்லாமல் அவை அழுகிப்போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
எங்களது சுரைக்காயை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து விட்டு செல்வர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் யாரும் வராததாலும் காய்களை பறிக்க கூலி ஆட்கள் இல்லாததாலும் வீணாகி விடுகிறது. நாங்களே அந்தியூர் வரை எடுத்துச் சென்று நேரடியாக விற்பனை செய்ய முற்பட்டாலும், நேர கட்டுப்பாடு காரணமாக விற்க முடியாமல் போவதுடன்,
விற்றாலும் அதிக லாபம் கிடைப்பதில்லை. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ40,000 முதல் 50,000 வரை செலவாகும். அதை விற்பனை செய்யும் போது ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம் லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சுரைக்காய் வீணாக கூடாது என்பதற்காக அவற்றை பறித்து கால்நடைகளுக்கு முழு தீவனமாக அதையே போட்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.