கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர்.
ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என தெரிவித்தார். தமிழ்நாட்டில் 25 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் குணமடைந்த 62 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். அதேபோல, துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.