மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.அதில், மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் என்றும், எந்த இடத்தில் வந்து வாகனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை, 10 நபர்களுக்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும். தேவைப்படின் அதிகப்படியாக பகல் 1 மணி வரை வாகனங்கள் திரம்ப ஒப்படைக்கப்படும் என டிஜிபி திரிபாதி குறிப்பிட்டுள்ளார்.