கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் தென்கொரியா நாட்டில் தேர்தல் நடக்கப் பெற்று அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை தள்ளிப்போட்டு உள்ள நிலையில் உலக நாடுகள் வியக்கும் வகையில் தென்கொரியா நேற்று நாடாளுமன்ற தேர்தலை நடத்தி உள்ளது. பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை கட்டுப்படுத்தி வெற்றியைக் கண்டது தென்கொரியா.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் வாக்களித்துள்ளனர். நாட்டில் 300 இடங்களில் நடைபெற்ற இத்தேர்தலில் 65 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயக கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 225 பேர் பலியாகிய நிலையில் தொற்றை திறமையாக கையாண்டு கட்டுப்படுத்தியதன் காரணமாகவே மக்கள் மூன் ஜே இன்-க்கு வெற்றியை கொடுத்ததாக தென்கொரியா ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.