வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது :
இன்று மட்டும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை – 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட நோய் கொரோனா. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர்.
அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான பரிசோதனை கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.