கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன என்றும் கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது.
இது ஜி-20 நாடுகளில் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்த ஆர்பிஐ ஆளுநர் , ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணிப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது.
ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது என தகவல் அளித்துள்ளார். இந்திய அந்நிய செலாவணி இருப்பு 476.5 மில்லியன் டாலராக உள்ளது. இந்திய ஏற்றுமதி 34.57 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.