நியூயார்க் நகரில் ஒரு பெண் கொரோனா பிடியால் கோமா நிலைக்கு போய் அதிலிருந்து மீண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை முதல் முறையாகச் சந்தித்து கொஞ்சும் நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் நியூயார்க் நகரின் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணிப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிசேரியன் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. ஆனால் அந்த பெண் கோமா நிலைக்கு சென்று விட்டார். கடந்த இரண்டு வாரங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பூரண குணமடைந்த யானிரா நேற்று மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலி மூலம் வீடு திரும்பினார்.
அப்போது மருத்துவமனையில் அனைவரும் அவருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் கைதட்டி அன்புடன் அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் தான் பெற்றெடுத்த ஆண் குழந்தையும் முதன்முதலாக அவர் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நிகழ்வை பார்த்து அங்கு சுற்றியிருந்தவர்களும் நெகிழ்ந்தனர்.