ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார சவால் காத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வாகன உற்பத்தில் பல மடங்கு குறைந்துள்ளது. விவசாயம், சிறுகுறு தொழில் கடன் வழங்க சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் தேக்கம் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனாவிற்கு எதிராக போராடும் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்த அவர், 150 ரிசர்வ் வங்கி பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வங்கிகளின் வழக்கமான சேவைகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் உள்நாட்டு உற்பத்தியில் சாதகமாக சூழ்நிலை உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மின்சார தேவை 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9% அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியகம் கணித்துள்ளதாக” இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இதை நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு சிறு, குறு, விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.