கன்னியாகுமரியில் சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்களை 40 கிலோ மீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் கீரிப்பாறை பகுதி அருகே தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இதில் கிராம்பு, மிளகு, உயர் ரக மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த எஸ்டேட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
ஆகையால் ஏப்ரல் 14 பின் ஊரடங்கு முடிவடையும் நம் ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்திருந்த சமயத்தில் மே 3 வரைஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்று விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டம் புளியரை பகுதியைச் சேர்ந்த 8 பேரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அந்த எஸ்டேட்டிலிருந்து நடை பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர்.
காவல்துறை அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த படியே 40 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்ற அவர்கள் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் வசமாக சிக்கிக் கொண்டனர். பின் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் உண்மையை கூற,
அவர்களை அதிகாரிகள் காவல் நிலையம் அழைத்துச் சென்றதுடன், கோட்டாட்சியர், தாசில்தார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்று சோதனை செய்தபோது அப்படி ஏதும் இல்லை. பின் எஸ்டேட் உரிமையாளரகள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் தொழிலாளர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.