மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 20ம் தேதி முதல் தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் தகவல் அளித்துள்ளார்.
இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார்.
சேலத்தில் 9 இடங்கள் கொரோனா தடுப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு வளையங்களில் 24 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார். சேலத்தில் 78 மளிகை கடைகள் மூலமாக மக்களின் வீடுகளுக்கு பொருள் விநியோகம் செய்யப்படுகிறது, விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சீனாவிடம் ஆர்டர் செய்யப்பட்ட ரேபிட் கருவிகளில் முதற்கட்டமாக 24,000 கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது.
1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய அவர், தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனையின்படியே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்கள் வேகமாக குணமடைந்து வருகின்றனர் என்றும் தமிழக மக்களை காப்பாற்றுவதே அரசின் கடமை என்றும் தகவல் அளித்துள்ளார்.