நாகையில் பெண் ஒருவர் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவர் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்கள் காய்கறியை வாங்கிச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருக்கடையூர் பகுதியில் பெண் ஒருவர் திடீரென மர்ம காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வெளிவரும்வரை, திருக்கடையூரில் எந்த கடையும் திறக்கக்கூடாது என நாகை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். மேலும் பெண் இறந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.