கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது.
பழனியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஒரு புதுவித தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா நோய் பாதித்தவர்களை கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம்.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனாவிலிருந்து குணமான நபரை அவரது வீடு உள்ள பகுதிக்குள் நுழைய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் திரும்பிய தகவலறிந்து பழனி அண்ணாநகர் பகுதி மக்கள் அவரை தங்கள் பகுதிக்குள் நுழைய விடாமல் போராட்டம் செய்தனர். அவர்களுடன் மருத்துவர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்து கொள்வதாக கூறி மருத்துவமனையில் தங்க வைத்தனர். எதிர்ப்பு நீடித்த நிலையில் பழனி சார் ஆட்சியர் உமா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, டிஎஸ்பி விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் அண்ணா நகர் பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குணமாகி உள்ள நபரால் தொற்று பரவாது என்றும், வீட்டிற்கு வந்தாலும் இன்னும் சில வாரங்கள் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க படுவார் என்றும், எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து குணமடைந்த நபரை அவரது வீட்டிற்கு வர பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.