சீனாவின் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை அது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வெளி வந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி அதிக அளவு உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தி சில அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் பரவியது எனக் கூறப்பட்ட நிலையில் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவ தொடங்கியது எனவும் கூறிவந்தனர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மாசா கொரோனா பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் இடையே 10 மைல் தொலைவு தான் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இதனிடையே கவனக்குறைவால் இது நடைபெறவில்லை, வேண்டுமென்றே வைரசை பரப்பி உள்ளனர் எனவும் சிலர் கூறிவந்தனர். இவ்வாறு தொற்று குறித்து அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மைக் பாம்பியோ சீனா தொற்று தொடர்பான உண்மையை மறைப்பதாகவும் நடந்தவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வவ்வால்களை சந்தையில் விற்றதாக தகவல் வந்தது. ஆனால் சந்தைகளில் வவ்வால்களை விற்பதும் இல்லை உணவு விடுதிகளில் அதனை சமைப்பதும் இல்லை என புதிதாய் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டுமென மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
சீனா அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க வைரஸை பரப்பா விட்டாலும் அமெரிக்க விஞ்ஞானிகளை விட சீன விஞ்ஞானிகள் வைரஸ் பரிசோதனையில் மிகவும் சிறந்தவர்கள் என காட்டிக்கொள்ள மடத்தனமாக சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளனர் அதில் அவர்களது அஜாக்கிரதை காரணமாக வைரஸ் கசிந்துள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார் மைக் பாம்பியோ. ஆனால் அமெரிக்கா வைத்து வரும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சீனா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.