அரசை குறை கூறுவதற்காக சும்மா, சும்மா திமுக அறிக்கை விடுகின்றது என முதலவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் எதாவது அறிக்கை விடுவது, குற்றம் சொல்வது.
ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிகாரிகள் இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அரசி குற்றம் சொல்லும் நேரமா இது ? உயிரை காக்க வேண்டிய நேரம்.அதற்க்கு வழிமுறை சொல்லாமல் குறைகளை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்காது. அனைத்துக்கட்சி கூட்டம் ஏன் நடத்த வேண்டும். இவர்கள் மருத்துவர்களா ? மருத்துவ வல்லுநர்கள் சொல்லுகின்ற ஆலோசனைப்படி செயல்பட்டால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும்.
இதில் அரசியல்வாதிகள் என்ன பேச முடியும். இருமாநில பிரச்சனையா ? நீர் பிரச்சனையா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க. இது மருத்துவத்துறை சார்ந்த பணி, மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது, மருத்துவ வல்லுனர்கள் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. இதையும் அரசியல் ஆக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு பணி செய்ய வேண்டும்.
பணி செய்கின்ற மருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து வீடு திரும்புவதற்கு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இதுதான் எங்களின் தலையாய பணி. இதை பார்க்கும் வரை எதிர்க்கட்சியினர் சொல்வதை எடுத்துக் கொள்ளமாட்டோம், எங்களுக்கு மக்கள் தான் முக்கியம், மக்களின் உயிர் தான் முக்கியம். இதற்காக நல்ல கருத்துக்களை சொன்னால் எடுத்து செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். தமிழ்நாட்டில் தான் இப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார்.