கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக அளவில் குணமடைந்து மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த 30 பேர் கொரோனா பாதிப்புக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மார்ச் மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் நேர அடிப்படையில் 105 மருத்துவர்கள் 110 செவிலியர்கள் கொண்ட மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். நேரத்திற்கு சரியான உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கி கனிவுடன் கவனித்ததற்கு உரிய பலன் கிடைத்துள்ளது.
14 நாட்களுக்கு பிறகு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் 30 பெருகும் கொரோனா பாதிப்பு சரியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2வது பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வர மருத்துவமனையில் இருந்த மருத்துவக் குழுவினரும் சிகிச்சை பெற்றவர்களும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 30 நபர்களும் வீட்டிற்கு சென்றாலும் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
17 நாட்கள் கழித்து வீடு திரும்பியது தங்களுக்கு மட்டும் இன்றி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெரும் அதனை பேருக்கும் நம்பிக்கையை விதைத்துள்ளதாக குணமடைந்தோர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்தம் 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.