நேற்று மட்டும் அதிகமானோர் குணமடைந்த வரிசையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மரணத்தை ஏற்படுத்தும் பெரும் நோய் தொற்று என்பதால் உலக நடுகள் அனைத்தும் தங்களது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு ஊரடங்கு அமுல்படுத்தி, அவரவர்களின் பொருளாதாரத்தை முடக்கி கொண்டனர்.
பொருளாதாரத்தை விட மக்களின் உயிரை முக்கியம் என்பதை உணர்ந்து உலக நாடுகள் இந்த நோய் தொற்றை அணுகுகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் வர்த்தக நகரமான மகாராஷ்டிரா முதல் இடம் வகுக்கின்றது. மகாராஷ்ட்ராவைத் தொடர்ந்து டெல்லியும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் இருக்கிறது . ராஜஸ்தான், மத்திய பிரதேசம் நான்காவது ஐந்தாவது இடத்தை பகிர்ந்துள்ளன.கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருவதால் மக்கள் மரண பிடியில் இருப்பதை போல உணர்கின்றனர்.
இந்தியாவில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1500க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 450 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 ஆயிரத்து 420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 1267 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 என்ற அளவிள் உள்ளது. நேற்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்து 118ஆக இருந்த எண்ணிக்கை 180ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை தமிழக மக்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டுகின்றது.
நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 259 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். இதில் தெலுங்கானாவில் 69 பேர் குணமடைந்த நிலையில் அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. அதே போல அதிக பேரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.