சீனா உலகிற்கு கொரோனா வைரசை பரப்பியதா என்று விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருக்கும் கடல் உணவு சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்டது ஆனால் விஞ்ஞானிகளின் கவனக்குறைவினால் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பரவியது என்ற செய்திகளும் வெளிவந்தன.
அமெரிக்க அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் 10 மைல் தூரம் தான் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். அதோடு கவனக்குறைவினால் அல்ல வேண்டுமென்றே வைரஸ் பரப்பப்பட்டது என்ற தகவலும் வந்த வண்ணம் உள்ளது.
சீனாவும் அமெரிக்காவும் இதுதொடர்பாக மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ, சீனா தொற்று குறித்து உண்மையை மறைப்பதாகவும் நடந்தவற்றை உலகிற்கு சொல்லியாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறியதாவது, “இந்த தொற்று சீனாவில் தோன்றியது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும், சந்தையில் இருந்து சில மைல் தூரத்தில் தான் வைராலஜி மையம் இருப்பது என்பதும் எங்களுக்கு தெரியும், தெரிந்துகொள்ள இன்னும் அதிகம் உள்ளது அதனை கண்டுபிடிக்க அமெரிக்கா விடாமுயற்சியுடன் செயல்படும்.
வைராலஜி மையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட வவ்வால்கள் சந்தையில் விற்கப் பட்டதாக தகவல் பரவியது. ஆனால் வவ்வால்களை சந்தையில் விற்பதும் இல்லை உணவு விடுதிகளில் சமைப்பதும் இல்லை எனும் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து உண்மையை விரைவில் வெளி கொண்டுவர வேண்டியது அவசியம்.
சீனா அமெரிக்காவின் மீது உயிரியல் போர் நடத்த வைரஸை பரப்பாவிட்டாலும் இதற்கு ஒரு காரணம் உண்டு. அமெரிக்க விஞ்ஞானிகளை விடவும் சீன விஞ்ஞானிகள் வைரஸ் சோதனையில் தலைசிறந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்ள முட்டாள்தனமாக சோதனையை நடத்தியுள்ளனர். அவர்களது அஜாக்கிரதையால் கொரோனா வைரஸ் வெளியே கசிந்துள்ளது” என பாம்பியோ குற்றம் சாட்டினார் ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.