அமெரிக்காவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கீரையை அழித்து வருகின்றனர்..
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அந்தநாட்டில் தினமும் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அதேபோல பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹால்ட்வில் என்னும் ஊரைச் சேர்ந்த ஜாக் வாசி, தேவ் புக்லியா ஆகியோர் பல நூறு ஏக்கர் பரப்பில் கீரை வகைகளை பயிரிட்டு அறுவடை செய்து மிகப்பெரிய ஹோட்டல்களுக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் கீரைகளை சந்தைப்படுத்த முடியாததால் அவற்றை தாங்களே டிராக்டர் கொண்டு உழுது அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இரத்தம், வியர்வை ,கண்ணீர் சிந்தி வளர்த்த கீரைகளை தாங்களே அழிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.. ஆனால் வேறு வழியில்லை என்றும், நாள்தோறும் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீரைகள் அனுப்பும் ஆர்டர்களை இழந்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.