கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பதில் தவறு நடந்து விட்டது எனக்கூறி 50 சதவீதம் இறப்பை அதிகரித்துள்ளது சீன அரசு
சீனாவில் வூஹானில் முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனாவின் மையமாக விளங்கிய வூஹான் தற்போது அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் சீனா கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தை மறைத்ததாக அமெரிக்கா சந்தேகத்தை எழுப்பிய நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 50% உயர்த்தியுள்ளது.
இறப்பை கணக்கிடுவதில் தவறு நடந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது சதவீதம் அதிகரித்ததாகவும் காரணம் சொல்லப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 1290 பெரை சேர்த்ததாக வூஹான் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3869 ஆக உயர்ந்துள்ளது.
இறப்பு சதவீதம் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து வெளியிட்ட சீன அரசு தரப்பு வைரஸ் பரவிய ஆரம்ப கட்டத்தில் அரசு பணியாளர்களால் தொற்றை சரியாக கையாள முடியாத சூழல் உருவாகியது எனவும் முக்கியமான விவகாரங்கள் தாமதமாகவும் ஆவணப்படுத்தப்படாமல் போனதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களால் அனைவருக்கும் தேவைப்படும் சிகிச்சையை கொடுக்க முடியவில்லை. சிலர் வீட்டிலேயே இறந்து போனார்கள் அதனை சரியாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. வூஹான் நகரில் பலியானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது.