ஒரே சமயத்தில் ஏழு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் கருவியை கண்டுபிடித்த மருத்துவரை மக்கள் பாராட்டியுள்ளனர்
உலக அளவில் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு செயற்கை சுவாசம் சரியான சமயத்தில் கிடைக்கப்பெறாமல் அதன் காரணமாக இறந்தவர்கள் அதிகம் உள்ளனர்.
இதன் காரணமாக செயற்கை சுவாசம் வழங்க வென்டிலேட்டரின் தேவை அதிகமாகி உள்ளது. உரிய நேரம் கொடுக்கப்படாத செயற்கை சுவாசம் நோயாளியின் மரணத்தை உறுதி செய்கிறது. அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் பலியானதற்கு வென்டிலேட்டர் போதிய அளவு இல்லாததும் காரணம் என கூறப்படுகிறது.
இதனை உணர்ந்துகொண்ட அமெரிக்கா வாழ் பாகிஸ்தான் மருத்துவரான அன்வர் ஒரு வெண்டிலட்டர் மூலம் ஏழு நோயாளிகளுக்கு உதவக்கூடிய புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது இந்த கண்டுபிடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் ஹீரோவாக நிற்கிறார்.
இத்தகைய சாதனத்தை உருவாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டின் அருகே உள்ள மக்கள் வரிசையாக அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தி அவரை ஆச்சரியப்படுத்தி உள்ளனர். காருக்குள் இருந்தபடியே வாழ்த்து பேனர்களை காட்டியும் கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்து சென்றுள்ளனர்.
இதனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த மருத்துவர் பதிலுக்கு நன்றி கூறி கைகளை அசைத்து உள்ளார். அதோடு தன் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மருத்துவர் அன்வர்.