2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோனி தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி இன்ஸ்டாகிராம் நேரலையில் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்
கொரோனா தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடரின் 13வது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இன்ஸ்டாகிராம் நேரலையில் 2017 ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியின்போது முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி தன்னிடம் கோபமாக நடந்து கொண்டது குறித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறியிருப்பதாவது “இலங்கைக்கு எதிரான இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியில் நான் பந்து வீசிய பொழுது குசால் பெரேரா பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அப்போது தோனி சத்தமாக பில்டர்களை மாற்றியமைத்து விட்டு பந்துவீசும் படி அறிவுறுத்தினார். ஆனால் நான் எந்த வீரர்களையும் மாற்றாமல் பந்து வீச்சினை தொடர்ந்தேன். குசால் மீண்டும் பவுண்டரிக்கு விளாசினார். உடனடியாக தோனி என்னிடம் வந்து பைத்தியமா..? நான் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளேன் .ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்க மாட்டீயா என கோபமாக பேசினார்.
அன்று அவரை கண்டு நான் மிகவும் பயந்தேன். அந்த போட்டி முடிவடைந்த பின்னர் மற்ற வீரர்களுடன் பேருந்தில் செல்லும் பொழுது தோனியுடன் நீங்கள் இதுவரை கோபப்பட்டது உண்டா எனக் கேட்டேன் அதற்கு கடந்த இருபது வருடங்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் கோபம் கொண்டது கிடையாது என தெரிவித்தார். தோனி விளையாடாமல் இருந்தபோதிலும் அவருக்கான ரசிகர்கள் குறையாததற்கு காரணம் அதுவே” என குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார்.